search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோமதி அம்மன்"

    சங்கரன்கோவிலில் உள்ள புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், வீடுகளில் தெளித்தும் பலன் காண்பார்கள்.
    அரியும் சிவனும் ஒன்றுதான் என்று உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன்கோவில். சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்பதுதான் அவர்களின் சர்ச்சைக்கு மூல காரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர்.

    அன்னை என்ன செய்வாள்? இருவரும் ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அந்த சிவனிடமே வரம் கேட்டாள். சிவபெருமானும் மனமுவந்து, பொதிகை மலைப் பகுதியில் புன்னை விருட்சம் உள்ள சங்கரன்கோவிலில் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்” என்றார்.

    பார்வதியும் புன்னைவனத்துக்கு சென்றாள். சங்கரன் கோவிலில் சிவனை நோக்கி உமாதேவியார் தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பவுர்ணமியில் புன்னை வனத்தில் சங்கர நாராயணராக உமாதேவியார் உள்ளிட்ட சகலருக்கும் காட்சி கொடுத்தார்.

    ஒரு புறம் சிவப்பு. மறுபுறம் சியாமளம். ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறுபுறம் வஜ்ர-மாணிக்க மகுடம். ஒரு புறம் மழு, மறுபுறம் சங்கு. ஒரு புறம் புலித்தோல், மறுபுறம் பீதாம்பரம். ஒரு புறம் ருத்திராட்சம், மறுபுறம் துளசி மாலை. ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான். மறுபுறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான். இப்படி அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், ‘வேண்டிய வரங்களைக் கேள்’ என சிவ பெரு மான் கூறினார்.

    ‘இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திருஉருவைக் கொள்ள வேண்டும்‘ என அம்பாள் பிரார்த்தித்தாள். ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியாருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார்.

    சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கர லிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம் உள்ளது. பொதுவாக ஸ்ரீசக்ர பிதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்.

    ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு. மனமாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட அதில் உட்கார்ந்து தியானித்துக் கொள்ளலாம். இக்கோவிலில் உள்ள புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் பலன் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
    ×